திருநாவலூர் ஒன்றியத்தை 3-ஆக பிரிக்க எதிர்ப்பு, 44 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்


திருநாவலூர் ஒன்றியத்தை 3-ஆக பிரிக்க எதிர்ப்பு, 44 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:15 AM IST (Updated: 27 Aug 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

திருநாவலூர் ஒன்றியத்தை 3-ஆக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து 44 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை, 

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்அடிப்படையில் புதிய மாவட்டம் உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிதாக உருவாக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள திருநாவலூர் ஒன்றியத்தை இணைத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட 44 ஊராட்சிகளை 3 ஆக பிரித்து ஒரு பகுதியை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் சேர்ப்பது என்றும், ஒரு பகுதியை உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் சேர்ப்பது என்றும், ஒரு பகுதியை களமருதூரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கவும் முயற்சி நடைபெறுவதாக திருநாவலூர் ஒன்றிய மக்களிடையே தகவல் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட 44 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் திருநாவலூர் ஒன்றியத்தை 3-ஆக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது உள்ளதைபோல் திருநாவலூர் ஒன்றியம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிலேயே இருக்க வேண்டும் என்றும், அதனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட 44 ஊராட்சிகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலத்தில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தபடி நின்று திருநாவலூர் ஒன்றியத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், திருநாவலூர் ஒன்றியத்தை பிரிக்காமல் புதிதாக உருவாக்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கவேண்டும். இல்லையென்றால் திருநாவலூர் ஒன்றியத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றனர். இந்த மனித சங்கிலி போராட்டம் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story