கடையநல்லூர் அருகே ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை


கடையநல்லூர் அருகே ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Aug 2019 3:15 AM IST (Updated: 27 Aug 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே நேற்று காலை ரெயில் முன் பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சன்புதூர்,

கடையநல்லூர் அருகே இக்பால்நகரில் தென்காசி- கடையநல்லூர் ரெயில்வே சாலையில் உள்ள மாவடிக்கால் ரெயில்வே கேட் அருகே நேற்று காலை தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், மாவடிக்கால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 67) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தின் அருகே மைல் கல்லில் அவர் மூக்கு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு அந்த வழியாக வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story