மாவட்டத்தில், 1-ந் தேதி 165 மையங்களில் குரூப்-4 தேர்வு - 48,838 பேர் எழுத உள்ளனர்


மாவட்டத்தில், 1-ந் தேதி 165 மையங்களில் குரூப்-4 தேர்வு - 48,838 பேர் எழுத உள்ளனர்
x
தினத்தந்தி 27 Aug 2019 3:15 AM IST (Updated: 27 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி 165 மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை 48 ஆயிரத்து 838 பேர் எழுத விண்ணப்பம் செய்து உள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) குரூப்-4-ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளது.

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலூகாவில் இத்தேர்வுக்காக 165 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் மொத்தம் 48 ஆயிரத்து 838 தேர்வர்கள் இத்தேர்வினை எழுத உள்ளார்கள்.

இதற்காக 165 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த 165 மையங்களிலும் 165 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்வு எழுதும்போது முறைகேடுகள் நடக்காமல் இருக்க துணை கலெக்டர், துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் நிலையில் 15 பறக்கும் படை அலுவலர்களும், துணை தாசில்தார் தலைமையில் 35 நடமாடும் குழுவினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து இணையதள மையங்களும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தரைத்தளத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நடைபெறும் நாளன்று சிறப்பு பஸ்வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு மையத்தில் தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனி வருங்காலங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாக தடைவிதிக்கப்படும் என்பதால், அனைத்து தேர்வர்களும் தேர்வாணைய விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுடன் தேர்வு எழுத வேண்டும்.

தேர்வு மையத்திற்குள் கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைகெடிகாரங்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டு உள்ளது. தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுவரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story