கோவில்பட்டி, திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் - 89 பேர் கைது


கோவில்பட்டி, திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் - 89 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2019 3:15 AM IST (Updated: 27 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, திருச்செந்தூரில் சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 89 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், அதனை சேதப்படுத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலையில் கோவில்பட்டி புது ரோடு சந்திப்பு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார்.மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, காளிராஜ், தொகுதி செயலாளர் முருகன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் செல்வம், நகர துணை அமைப்பாளர் மணிகண்டன், நகர துணை தலைவர் பாண்டி வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 48 பேரை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோன்று திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், ஒன்றிய செயலாளர் சங்க தமிழன், மாநில கருத்தியல் பரப்புரை துணை செயலாளர் தமிழ்குட்டி, மாநில சமூக நல்லிணக்க பேரவை துணை அமைப்பாளர் காயல் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியிலில் ஈடுபட்ட 41 பேரை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரதாபன், தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story