தர்மபுரியில், அமைப்புசாரா தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
தர்மபுரியில் கட்டு மானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட நலவாரிய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சுதர்சனன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் முருகேசன், லட்சுமி நாராயணன், குழந்தைவேலு, சாமி, கண்ணபிரான், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து நலவாரிய அலுவலகம் வரை நடந்த ஊர்வலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றார்கள். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் 1996-ஐ ரத்து செய்யும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தில் உள்ள ரூ.30 ஆயிரம் கோடிக்கும் மேலான தொகையை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தகூடாது. இந்திய அரசின் உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தை கட்டுமான நலவாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து இந்த துறையை பாதுகாக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களை நலவாரியங்களில் பதிவு செய்யும் முறையை எளிமைபடுத்த வேண்டும். நலவாரிய பயன்கள் தொழிலாளர்களை எளிதாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய அலுவலகங்களில் போதிய அளவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். 44 தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்பாக திருத்தம் செய்து வெளியிடப்பட்டதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதன்முடிவில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Related Tags :
Next Story