தர்மபுரி, அரூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 53 பேர் கைது
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தர்மபுரி, அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 53 பேரை போலீசார்கைது செய்தனர்.
தர்மபுரி,
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தர்மபுரியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் மன்னன், மின்னல்சக்தி, அதியமான், பாரதிராஜா, மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரூரில் ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகி ராமசந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மூவேந்தன், கலையரசன், திரிலோகன், கேசவன், இளையராஜா, தீர்த்தகிரி, வேலன், சித்தார்த்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர். பின்னர் இரவு அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story