ஓசூர் அருகே துணிகரம்; காவலாளி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


ஓசூர் அருகே துணிகரம்; காவலாளி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 26 Aug 2019 10:30 PM GMT (Updated: 26 Aug 2019 8:33 PM GMT)

ஓசூர் அருகே காவலாளி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளி சுபாஷ் நகரை சேர்ந்தவர் பைரப்பா (வயது 55). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கெம்பம்மா (45). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இதனால் கணவன் - மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு கெம்பம்மா சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு பைரப்பா வேலைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலில் இருந்து வீட்டிற்கு கெம்பம்மா திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டு இருந்தது. நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைதானத்தில் கிடந்தது. இதுபற்றி அறிந்த பைரப்பா மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டிற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story