போலி ஆவணங்கள் மூலம் முதல்-மந்திரி நிவாரண நிதியில் ரூ.75 லட்சம் மோசடி டாக்டர், பெண் கைது


போலி ஆவணங்கள் மூலம் முதல்-மந்திரி  நிவாரண நிதியில் ரூ.75 லட்சம் மோசடி டாக்டர், பெண் கைது
x
தினத்தந்தி 27 Aug 2019 3:15 AM IST (Updated: 27 Aug 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் முதல்-மந்திரி நிவாரண நிதியில் ரூ.75 லட்சம் மோசடி செய்த டாக்டர், பெண் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர், விபத்து போன்ற துயரங்களின் போது முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இருதய நோய் மற்றும் குறிப்பிட்ட சில நோய் சிகிச்சைகளுக்கும் முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகிறது.

சமீபத்தில் தானேயில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் 2 நோயாளிகளுக்கு நிதி உதவி கேட்டு மந்திராலயாவில் உள்ள சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து மந்திராலயா அதிகாரிகள் தானேயில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, நிதி உதவி கேட்டு விண்ணப்பித்து இருந்த 2 நோயாளிகளின் பெயரில் அங்கு யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த மோசடி குறித்து மந்திராலயா அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக டாக்டர் அனில் ஹரிஷ்(வயது40) மற்றும் ஆர்த்தி என்ற பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் அவர்களது கும்பலை சேர்ந்தவர்கள் ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக போலி ஆவணங்களை தாக்கல் செய்து அதற்கான பணத்தை முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து பெற்றுள்ளனர்.

இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 64 நோயாளிகளின் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.75 லட்சம் வரை மோசடி செய்து உள்ளனர். ஏழைகளுக்கு புற்றுநோய், கல்லீரல் செயல் இழத்தல், இருதயகோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்ததாக அவர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர்.

“கைது செய்யப்பட்ட டாக்டர் மந்திராலாவில் சிலரை தெரியும் என கூறியுள்ளார். இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் தப்பிக்காமல் இருக்க உயர் மட்ட அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே கூறினார்.

Next Story