சேலத்தில், குடிநீரில் குளோரின் செலுத்தும் அறைகளில் ஆணையாளர் ஆய்வு


சேலத்தில், குடிநீரில் குளோரின் செலுத்தும் அறைகளில் ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2019 3:15 AM IST (Updated: 27 Aug 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குடிநீரில் குளோரின் செலுத்தும் அறைகளில் ஆணையாளர் சதீஷ் ஆய்வு நடத்தினார்.

சேலம், 

மேட்டூர் அணையில் இருந்து தனிகுடிநீர் திட்டத்தின் மூலம் சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள 56 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து நாள் ஒன்றிற்கு 124 எம்.எல்.டி வீதம் 60 வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரில் குளோரின் பவுடர் கலக்கும் முறைகளை மாற்றியமைத்து மாமாங்கம் பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் திரவ குளோரினை செலுத்தும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.

மேலும் அரியாகவுண்டம்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி வெங்கடப்பன் ரோடு ஆகிய பகுதிகளில் திரவ குளோரின் உட்புகுத்தும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றம் செய்து குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து ஆணையாளர் சதீஷ் கூறும்போது, ‘தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பருவமழை காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குடிநீரை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காமல் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரை மாற்றி, அதை சேமித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்கள் மற்றும் தொட்டிகளை முறையாக சுத்தப்படுத்த வேண்டும்‘ என்றார்.

இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் திலகா, உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், நித்யா, சுகாதார ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story