தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் மீது நடவடிக்கை: சர்வதேச தொலைபேசி அழைப்புகளில் நூதன மோசடி சென்னையில் 5 பேர் கைது
சர்வதேச தொலைபேசி அழைப்புகளில் நூதன மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் மேற்கு, தங்கம் காலனியில் இயங்கிவந்த ‘டிராவ் டெலிகம்யூனிகேஷன்’ தொலைத்தொடர்பு நிறுவனம் தொலைபேசி அழைப்புகளில் மோசடி செய்வதாக தமிழ்நாடு தொலைத் தொடர்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளும் இணைந்து அந்த நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது நவீன தொழில்நுட்பம் மூலம் வெளிநாடுகளில் இருந்துவரும் சர்வதேச தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றம் செய்து அந்த நிறுவனம் நூதனமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதனால் தொலைத்தொடர்புத்துறைக்கு பெருமளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 22 சிம் பாக்ஸ்கள், 1500 சிம் கார்டுகள், 16 ரூட்டேர், வை-பை மோடம், வெளிநாட்டு இணைப்பு கார்டுகள், செல்போன்கள், வெளிநாட்டு பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக சி.பி.ஐ.சி.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தை நடத்தி வந்த முப்பிரி ரெட்டி மற்றும் 4 பணியாளர்கள் என 5 பேரை கைது செய்தனர். இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது 1800 110 420 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று சென்னை தொலைத் தொடர்பு துறையின் துணை தலைமை இயக்குனர் ஜி.கலைவாணி அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story