கணவரிடம் இருந்து குழந்தையை மீட்கக்கோரி ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


கணவரிடம் இருந்து குழந்தையை மீட்கக்கோரி ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 27 Aug 2019 4:39 AM IST (Updated: 27 Aug 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, 

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் துர்காதேவி. இவருடைய கணவர் தமிழரசு. இவர்களுக்கு 6 வயதில் ஷிவானி என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் துர்காதேவியிடம் இருந்து வந்த ஷிவானியை திடீரென்று தமிழரசு அழைத்து சென்றுள்ளார். மகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி துர்காதேவி பலமுறை முறையிட்டும் தமிழரசு ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. இதனால் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த துர்காதேவி, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டு முன்பு தீக்குளிக்க திட்டமிட்டு மண்எண்ணெய் பாட்டிலுடன் நேற்று அங்கு வந்தார். ஐகோர்ட்டு வளாகத்தில் குடும்பநல கோர்ட்டு கட்டிடத்தின் நுழைவுவாயில் பகுதியில் திடீரென்று அவர் கதறி அழுதபடி தான் கொண்டு வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதைப் பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், துர்காதேவியை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஐகோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story