ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வலியுறுத்தி, மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்


ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வலியுறுத்தி, மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:15 AM IST (Updated: 27 Aug 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வலியுறுத்தி மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம், 

சேலம் மாவட்ட தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். செயலாளர் விஜய்ஆனந்த் வரவேற்றுப்பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் திலீப்மேனன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் 44 தொழிலாளர் சட்டங்களை, 4 சட்டங்களாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மாதம் குறைந்த பட்சம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போனஸ் வழங்க வேண்டும். விற்பனை அபிவிருத்தி பணியாளர்கள் சட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 5 லட்சத்திற்கு மேல் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளோம். மத்திய அரசு தற்போது தொழிலாளர் சட்டத்தை மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. இந்த சட்டத்தை மாற்றினால் எங்கள் வேலைக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விடும்.

எனவே தொழிலாளர் சட்டத்தை மாற்ற முயற்சிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். எங்கள் கோரிக்கை மனுவில் சேலம், ஆத்தூர், நாமக்கல் ஆகிய இடங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து கையெழுத்து பெற்று அதை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரிக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story