பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊட்டி பிஷப் டவுன், மகாத்மா காலனி, ஆர்.கே.புரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அவர்கள் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவது, சேறும் சகதியும் நிறைந்து இருப்பது, மண்சரிவு ஏற்பட்டது ஆகிய புகைப்படங்களை கொண்டு வந்து இருந்தார்கள். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பிஷப் டவுன், மகாத்மா காலனி, ஆர்.கே.புரம் ஆகிய பகுதிகளில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் சாலையில் படிந்து உள்ளது. இது குண்டும், குழியுமான இடத்தில் தண்ணீரோடு கலந்து கிடப்பதால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. சாலை பயன்படுத்த இயலாத நிலையில் மோசமாக காட்சி அளிக்கிறது.
சாலையே தெரியாத அளவுக்கு மண் மூடி காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளார். பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லவோ அல்லது குழந்தைகள் பள்ளிக்கு செல்லவோ மிகவும் கடினமான சூழ்நிலை நிலவுகிறது. வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அப்பகுதி வழியாக தான் ஊட்டிக்கு செல்கின்றன. இந்த வழியாக வரும் வாகனங்கள் பழுதடைந்து தான் செல்கிறது. அங்கு பொருத்தப்பட்டு உள்ள தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதுகுறித்து மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழுதடைந்து காணப்படும் சாலையை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மஞ்சூர் அருகே பெம்பட்டி கிராம மக்கள் கனமழையால் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் மற்றும் பாலத்தை கட்டி தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இத்தலார் அருகே பெம்பட்டியில் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் அகலம் குறைந்து பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இம்மாத தொடக்கத்தில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இத்தலார்-பெம்பட்டி சாலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெம்பட்டி அவலாஞ்சி அருகே உள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர்் பொக்லைன் எந்திரம் மூலம் மண்சரிவை அகற்றி மற்றும் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்த அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெம்பட்டிக்கு செல்லும் சாலையில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, இடிந்து விழுந்த பாலம் மற்றும் தடுப்புச்சுவரை மீண்டும் கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர் வசதி உள்பட மொத்தம் 289 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப் பட்டன.
Related Tags :
Next Story