சேவை குறைபாடு காரணமாக, முதியோருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - ஆன்லைன் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


சேவை குறைபாடு காரணமாக, முதியோருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - ஆன்லைன் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Aug 2019 3:30 AM IST (Updated: 27 Aug 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

சேவை குறைபாடு காரணமாக முதியோருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆன்லைன் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தர விட்டது.

கோவை,

கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 60).

இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் 4ஜி வசதியுடன் ரூ.10 ஆயிரத்து 48 மதிப்பில் ஒரு செல்போன் ஆர்டர் செய்தார். ஓரிரு நாட்களுக்கு பின்னர் அந்த செல்போன் அவருக்கு கிடைத்தது.

அதை பெற்றுக்கொண்ட கோபாலகிருஷ்ணன் அந்த செல்போனில் சிம்கார்டு போட்டு பார்த்தபோது அது 4ஜி வசதியை ஏற்றுக்கொள்ள வில்லை என்பதும், 3ஜி வசதியையே ஏற்றுக்கொள்ளும் செல்போன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக வாடிக்கையாளர் மையத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, கோவையில் உள்ள சர்வீஸ் சென்டரில் கொடுக்கும்படி கூறினார்கள்.

உடனே அவர் அங்கு சென்று செல்போனை கொடுத்தார். அங்கு இருந்த ஊழியர்கள் அந்த செல்போனை சரிசெய்து கொடுத்தனர். அப்போது 3 மாதங்கள் மட்டுமே 4ஜி வசதி கிடைத்தது. பின்னர் மீண்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் மீண்டும் அந்த சர்வீஸ் சென்டருக்கு சென்று சரிசெய்து கொடுக்கும்படி கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் சரிசெய்து கொடுக்கவில்லை.

இதையடுத்து அவர் தான் செல்போன் ஆர்டர் செய்த தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அவர்களும் சரியாக பதில் கூறவில்லை. எனவே கோபாலகிருஷ்ணன் இது தொடர்பாக கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 4ஜி வசதியுடைய செல்போன் என்றுகூறி தனக்கு 3ஜி வசதியுடைய செல்போனை கொடுத்து விட்டனர்.

எனவே எனக்கு வேறு செல்போனோ அல்லது அதற்குரிய பணத்தை திரும்ப பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி பாலசந்திரன், உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்ததும் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி 4ஜி வசதியுடைய செல்போன் என்று கூறிவிட்டு 3ஜி செல்போனை வாடிக்கையாளருக்கு வழங்கியது சேவை குறைபாடு ஆகும். எனவே இழப்பீடாக கோபாலகிருஷ்ணனுக்கு அந்த செல்போனின் மதிப்பான ரூ.10 ஆயிரத்து 48-ஐயும், மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை ஆன்லைன் நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதி பாலசந்திரன் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

Next Story