கலப்பட எண்ணெய் தொழிற்சாலைக்கு ‘சீல்’ - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அன்னூர் அருகே பண்ணை தோட்டத்தில் செயல்பட்ட கலப்பட சமையல் எண்ணெய் தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்பட சமையல் எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில், ஊழியர்கள் சுழல் வண்ணன், ஆறுச்சாமி உள்ளிட்ட குழுவினர் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டன்புதூரில் உள்ள பொன்னுசாமி(வயது62) என்பவரின் பண்ணை தோட்டத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
அங்கு கலப்பட சமையல் எண்ணெய் தொழிற்சாலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் கடலெண்ணெய் ஆகியவற்றை டின்களில் மொத்தமாக வாங்கி வந்து, அதில் பாமாயில் கலந்து வேறு ஒரு டின்களில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் 1,500 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெயை பறிமுதல் செய்தனர். எண்ணெய் டின்களும் கைப்பற்றப்பட்டு தொழிற்சாலைக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது:-
ஊருக்கு ஒதுக்குப்புறமாக கலப்பட எண்ணெய் தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. பொன்னுசாமி, அவருடைய மகன் அசோக் ஆகியோர் இணைந்து இதனை நடத்தி வந்துள்ளனர். சமையல் எண்ணெய் தொழிற்சாலை நடத்த எந்தவித உரிமமும் பெறவில்லை. சமையல் எண்ணெயுடன் பாமாயில் கலந்து சிறுமுகை, அன்னூர், குமரன் குன்று உள்ளிட்ட கிராமங்களில் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட எண்ணெயின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். குடோனுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒரு கடையும் பொன்னுசாமி உரிமம் இல்லாமல் நடத்தி வந்துள்ளார். இதில் மசாலா பாக்கெட் உள்ளிட்ட மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் கீழ் பொன்னுசாமி மற்றும் அவருடைய மகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கலப்பட உணவு பொருட்கள் குறித்து 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story