அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் செய்தனர். ஆட்டோ டிரைவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்,
வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் அரக்கோணம் நகரம் உள்ளது. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் 155 ஆண்டு பழமை வாய்ந்த சந்திப்பு ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. இந்த வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சென்று வருகின்றன.
மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தென்மாநிலங்களிலேயே 2 இடங்களில் தான் உள்ளது. அதில் ஒன்றாக அரக்கோணத்தில் பயிற்சி மையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளம், தேசிய பேரிடர் மீட்பு படை மையம், ரெயில்வே பொறியியல் பணிமனை, ஏ.சி. லோகோ பணிமனை உள்ள பெரிய நகரமாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 30 வருடங்களாக அரக்கோணம் மக்கள் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வந்தனர். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.
ஆனால் கடந்த சுதந்திர தினத்தன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிய போது வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு 3 மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அரக்கோணத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதை கண்டித்தும், அரக்கோணத்தையே தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஓட்டல்கள், டீ கடைகள், நகைகடைகள், ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் காந்திரோடு உள்பட முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதைத் தொடர்ந்து அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள், சமூக அமைப்புகள், கட்சி நிர்வாகிகள் கண்டன போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவையின் வேலூர் மாவட்ட தலைவர் கே.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார். ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் பி.இளங்கோ, நகை வியாபாரிகள் சங்க தலைவர் எம்.எஸ்.மான்மல், மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எத்திராஜிலு, செயலாளர் ஜி.டி.என்.அசோகன், ரோட்டரி சங்க தலைவர் எம்.எஸ்.குணசீலன், பொருளாளர் ஆர்.வெங்கடரமணன், ஓட்டல்கள் சங்க தலைவர் மகேஷ்குமார், செயலாளர் என்.பார்த்திபன், ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனாமாசிலாமணி, தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் வியாபாரிகள், சமூக அமைப்பு நிர்வாகிகள், ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் அனைத்து நிர்வாகிகளிடம் அரக்கோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விண்ணப்ப படிவங்கள் கொடுத்து முகவரியுடன் கையெழுத்து வாங்கி தமிழக முதல் -அமைச்சருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் மாவட்ட தலைவர் கே.எம்.தேவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரக்கோணம் நகரம் ராணிப்பேட்டையை விட பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரம் ஆகும். அரக்கோணத்தை சுற்றி 360 கிராமங்கள் உள்ளன. 30 ஆண்டுகளாக அரக்கோணத்தை மாவட்டமாக்க கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கூறி இருப்பது அரக்கோணம் பகுதி மக்களுக்கு மிகவும் வேதனையளிக்கிறது.
இதை கண்டித்து வியாபாரிகள், சமூக தொண்டு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆகவே தமிழக அரசு மறுபரிசீலனை செய்து அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க துணை தலைவர்கள் சிவசுப்பிரமணியராஜா, ஜனார்த்தனம், சிவசுப்பிரமணியன், செயலாளர் இன்பநாதன், பூ வியாபாரிகள் சங்க தலைவர் சாய், ஏ.பி.எம்.சீனிவாசன் உள்பட அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சமூக தொண்டு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அத்துடன் அரக்கோணம் பழைய, புதிய பஸ் நிலையம், மார்க்கெட், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எஸ்.ஆர்.கேட், பழனிப்பேட்டை, காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்து விட்டு டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் நகருக்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம் நிமித்தமாக ரெயில் மூலம் வந்து செல்கின்றனர். நேற்று அரக்கோணம் நகரில் கடையடைப்பு போராட்டம் நடந்ததாலும் ஆட்டோக்கள் ஓடாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story