விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில், குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதிகளில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே மண்டகப்பட்டு ஏரியில் பொதுப்பணித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கரையை பலப்படுத்துதல், மதகை புதுப்பித்தல், தடுப்புச்சுவர் அமைத்தல், பாசன வாய்க்காலை சீர்செய்தல், நீர்வரத்து வாய்க்காலை தூர்வாருதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பூவரசன்குப்பம் ஏரியில் ரூ.40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும், பஞ்சமாதேவி, பள்ளிநேலியனூர், விக்கிரவாண்டி அருகே திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியின் பரப்பளவை முழுவதும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளில் வசிப்பவர்களுக்கு வேறு இடம் வழங்கி பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
குடிமராமத்து பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார். மேலும் அரசு அலுவலர்களுடன் இணைந்து இப்பணிகளில் முழுவதுமாக ஈடுபட்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பாசனதாரர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கீழ்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஜவகர், தாசில்தார்கள் பிரபுவெங்கடேஸ்வரன், பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர்கள் ஜெகதீஷ், வடிவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story