உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்


உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:30 PM GMT (Updated: 27 Aug 2019 7:03 PM GMT)

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

திருச்சி,

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவில் மட்டும் அல்ல, சோழ நாட்டு திவ்ய தேசங்களில் 2-வது திருத்தலம் என்ற பெருமைக்கும் உரியதாகும். உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த தர்மவர்மன் என்ற சோழமன்னன் குழந்தை பாக்கியம் இல்லாததால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வேண்டினார்.

இதன் விளைவாக அவருக்கு தாமரைப்பூ மூலம் பெண் குழந்தை கிடைத்ததால் அக்குழந்தைக்கு கமலவல்லி என பெயரிட்டு வளர்த்தார். பருவ வயதை அடைந்ததும் ரெங்கநாதருடன் ஐக்கியமானார் கமலவல்லி. தனது மகளின் நினைவாக சோழமன்னன் எழுப்பிய கோவிலே உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலாகும்.

1-ந்தேதி கும்பாபிஷேகம்

இக்கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அதாவது பங்குனி மாதம் ஆறாம் திருநாளன்று உற்சவர் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பாடாகி உறையூர் கோவிலில் எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதித்து வருகிறார்.

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வந்தன.

இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9 மணிக்கு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது.

யாகசாலை பூஜைகள்

தொடர்ந்து வருகிற 1-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். வருகிற 1-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் காலை 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story