மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:45 AM IST (Updated: 28 Aug 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழு சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் மாயூரம் வக்கீல்கள் சங்கம், மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கம், வர்த்தக சங்கம், வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் பேரமைப்பு, அரசியல் கட்சியினர், காவிரி அமைப்பு, இந்திய மருத்துவ சங்கம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

நேற்று குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வக்கீல்கள் ராம.சேயோன், குபேந்திரன், தொழில்அதிபர் எம்.என்.ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், ஆறுபாதி கல்யாணம், பவுன்ராஜ், பழனிவேல், நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டக்குழுவினர், மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக மயிலாடுதுறை உதவி கலெக்டர் மண்மணியிடம் மனு கொடுத்தனர்.

ஊர்வலம்

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி நேற்று வைத்தீஸ்வரன்கோவிலில், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து குழு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு குழுவை சேர்ந்த பூம்புகார் சங்கர் தலைமை தாங்கினார். பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் ஜெகவீரபாண்டியன், வைத்தீஸ்வரன்கோவில் வர்த்தக சங்க தலைவர் செந்தில்முருகன், பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழு தலைவர் செந்தில்வேல், ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதைப்போல மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக்கோரி நேற்று குத்தாலத்தில் நாதஸ்வரம் இசைத்தபடி ஊர்வலம் நடந்தது. காவிரி அமைப்பை சேர்ந்த கோமல் அன்பரசன் வரவேற்றார். குத்தாலம் வர்த்தகர் சங்க பொறுப்பாளர்கள் உதயாபாலு, செல்வம் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலத்தில் மயிலாடுதுறை வக்கீல்கள் சங்க தலைவர் ராமசேயோன், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், பாண்டூரங்கன், ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் மயிலாடு துறைக்கு புறப்பட்டு சென்றனர். 

Next Story