கோவில்பட்டியில் குப்பை சேகரிப்பதற்கான வரியை குறைக்க ஏற்பாடு - நகரசபையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு
கோவில்பட்டியில் குப்பை சேகரிப்பதற்கான வரியை குறைக்க ஏற்பாடு செய்வது என்று நகரசபை அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நகரசபையில் சொத்து வரி, குப்பை சேகரிப்பதற்கான வரி பல மடங்கு உயர்த்தியதை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், நேற்று காலையில் கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) என்ஜினீயர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நகரசபை வருவாய் அலுவலர் ராஜேசுவரன், சுகாதார அலுவலர் இளங்கோ, மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், நகர செயலாளர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு ஆணைப்படி சொத்து வரி உயர்வு செய்யப்பட்டது தொடர்பாக (வீடுகளுக்கு 50 சதவீதம், கடைகளுக்கு 100 சதவீதம் உயர்வு) நகரசபை அலுவலகம் முன்பு டிஜிட்டல் பேனர் வைப்பது. மேலும் இதுகுறித்து அனைத்து வார்டுகளிலும் வாகனத்தில் சென்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பது. திடக்கழிவு மேலாண்மை திட்ட வழிகாட்டுதல்படி, குப்பை சேகரிப்பதற்கான வரி (ரூ.500 வீட்டுத்தீர்வை செலுத்துகிறவர்களிடம்) ரூ.60-ல் இருந்து ரூ.10 ஆகவும், (ரூ.1000-க்கு அதிகமாக வீட்டுத்தீர்வை செலுத்துகிறவர்களிடம்) ரூ.90-ல் இருந்து ரூ.20 ஆகவும் குறைக்க ஏற்பாடு செய்வது.
2-வது குடிநீர் திட்டத்தில் புதிதாக கட்டப்படும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை வருகிற 15-ந்தேதிக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது. வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது. குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
Related Tags :
Next Story