வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வாலிபர் படுகாயம்


வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:30 AM IST (Updated: 28 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே வடக்கு மயிலோடை ஆதி திராவிடர் காலனியில் வீட்டின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வடக்கு மயிலோடை ஆதி திராவிடர் காலனியில் 32 குடியிருப்புகள் உள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான வீடுகளில் காங்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து பழுதடைந்த நிலையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலையில் அங்கு விவசாயி பால்ராஜ் என்பவரது வீட்டின் காங்கிரீட் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு திடீரென்று பெயர்ந்து விழுந்தது. இதில் அவருடைய மகன் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகாராஜன் (வயது 22) பலத்த காயம் அடைந்தார்.

உடனே அவருக்கு கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மகாராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே சேதம் அடைந்த வீட்டை வருவாய் ஆய்வாளர் காசிராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எனவே வடக்கு மயிலோடை ஆதி திராவிடர் காலனி குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story