தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிவகங்கை கோர்ட்டில் சரண்


தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிவகங்கை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:30 AM IST (Updated: 28 Aug 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிவகங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு கருப்பந்துறையை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி. கடந்த 18-ந்தேதி இரவு கருப்பந்துறை ரோட்டில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்த மணிகண்டனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாரியப்பன் என்ற மதனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் விளாகத்தை சேர்ந்த ராஜா என்ற சின்னத்துரை (வயது 19) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண் அடைந்தார்.

இந்த கொலை வழக்கில் அந்த பகுதியை சேர்ந்த வேல்முருகன் (41) என்பவர் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இதில் வேல்முருகன் நேற்று சிவகங்கையில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதேவி உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகனை போலீசார் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதற்கிடையே கோர்ட்டுகளில் சரண் அடைந்த ராஜா, வேல்முருகன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை சந்திப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story