கல்லணையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.58 கோடியில் பாலம் கட்டும் பணி மும்முரம்


கல்லணையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.58 கோடியில் பாலம் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 28 Aug 2019 4:15 AM IST (Updated: 28 Aug 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கல்லணையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.58 கோடியில் பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணை உள்ளது. தஞ்சை-திருச்சி இடையே கல்லணை பாலங்களின் மீது கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டார பகுதி மக்கள் கல்லணையில் மேற்கு பகுதியில் இறங்கி கல்லணை பாலங்களின் மீது 1½ கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று திருச்சி, திருவெறும்பூர். திருவாணைக்காவல் செல்ல பஸ் ஏற வேண்டி உள்ளது.

திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளையும் காய்கறி, வாழை இலை போன்ற பொருட்களை லாரியில் ஏற்றி செல்ல இயலாமல் மினி வேன்களில் அதிக செலவில் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் கல்லணையில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதிய பாலம் கட்டும் பணி

இதை தொடர்ந்தது திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம்ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி கல்லணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நெடுஞ்சாலை துறை (திட்டங்கள்) சார்பில் ரூ.58 கோடி மதிப்பில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி புதிய பாலம் கட்ட பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் 1052 மீட்டர் நீளத்தில் கட்டப்படுகிறது. இதில் 42 மீட்டர் இடைவெளியில் 25 தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் 42 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் (பீம்கள்)உத்திரங்கள் அமைக்கப்பட்டன. 100 கான்கிரீட் தூண்களை ராட்சத கிரேன்கள் மூலம் பாலத்தின் தூண்களுக்கு இடையே தூக்கி வைக்கப்பட்டு விட்டன. தற்போது இறுதி கட்ட பணிகளாக உத்தரங்களின் மேல் தளம் அமைக்கும் பணிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மற்ற இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு, நடைபாதை பணிகள் முடிக்கப்பட்டு கைப்பிடிச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டு சுவர்

பால பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் பாலத்தின் திருச்சி மாவட்ட கிளிக்கூடு கிராமத்தின் பாலம் நிறைவு பெறும் பகுதியில் 75 மீட்டர் தூரத்திற்கு நில கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருச்சி மாவட்ட பகுதியில் பால பணிகள் முடிவடைந்த பகுதியில் பக்கவாட்டு சுவர் கட்டப்பட்டு அதில் மண் நிரப்பும் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைவாக முடித்துவிட்டால் பால கட்டுமான பணிகளை இந்த ஆண்டிலேயே முடித்து பொதுமக்கள் பயன்பாடடி்ற்கு கொண்டு வர இயலும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story