அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் அடையாள வேலைநிறுத்தம் - சிகிச்சை பெற வந்த நோயாளிகள் தவிப்பு
ஆரணி, செய்யாறு அரசு மருத்துவமனைகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்புக்குள்ளாயினர்.
ஆரணி,
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு, டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிடை கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அரசு டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் டாக்டர் நந்தினி தலைமையில் அனைத்து டாக்டர்களும் ஒட்டுமொத்தமாக அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களுக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் அவர்கள் சிகிச்சை பெறுவது பாதிக்கப்பட்டது. வெகுநேரமாக காத்திருந்த நோயாளிகள் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டபோது அவர்கள் மறுத்து விட்டனர்.
உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளில் டாக்டர்கள் ஏற்கனவே வழங்கிய ஆலோசனைப்படி செவிலியர்கள் ஊசி போட்டு மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்தனர். அவசர பிரிவில் வந்த நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை வழங்கினர். அதுவும் வழங்கக்கூடாது என டாக்டர்கள் எச்சரித்ததாகவும் மருத்துவமனை அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.
சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ளும் நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் வாங்க மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே மாத்திரை, மருந்துகள் வழங்கப்படும். டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் அவர்களும் மருந்து, மாத்திரைகள் வாங்க முடியாமல் தவித்தனர்.
செய்யாறில் திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச்சென்றனர். எனினும் அவசர சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் சிகிச்சை அளித்தார்.
Related Tags :
Next Story