பெருங்குடியில் கத்தியால் குத்தி பெண் கொலை கணவருக்கு வலைவீச்சு
பெருங்குடியில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை இந்திரா தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). கார் டிரைவர். இவரது மனைவி மணிமேகலை (26). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. உதயகுமார் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் மது குடிப்பது வழக்கமாக வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த மணிமேகலை இது குறித்து உதயகுமாரிடம் கேட்டு சத்தம் போட்டு உள்ளார். அப்போது அங்கு இருந்த உதயகுமாரின் நண்பர் மணி என்பவர் மணிமேகலையை திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மணிமேகலையின் உறவினர்கள் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக உதயகுமார் மற்றும் மணியை அழைத்து அறிவுரை கூறி போலீசார் அனுப்பி உள்ளனர். இதனால் உதயகுமார் ஆத்திரம் அடைந்தார்.
குத்திக்கொலை
நேற்று வீட்டிற்கு வந்த மணிமேகலையை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு உதயகுமார் தப்பி ஓடிவிட்டார். மணிமேகலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு ஓடி வந்தனர். அப்போது மணிமேகலை ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை இறந்தார்.
இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story