கள்ளக்காதலுக்கு இடையூறு: டிரைவர் கொலை வழக்கில் மனைவி, காதலனுக்கு ஆயுள் தண்டனை சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் டிரைவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
சென்னை நெற்குன்றம் பாடிகுப்பம் வண்டியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், டிரைவர். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 25). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயபாரதிக்கும், பாடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இவர்களது கள்ளத்தொடர்புக்கு கார்த்திக் இடையூறாக இருந்து வந்துள்ளார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட ஜெயபாரதி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முடிவு செய்தனர். மெரினா கடற்கரைக்கு கார்த்திக்கை அழைத்து வந்து அங்கு கொலையை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டனர்.
மெரினாவில் கொலை
அதன்படி, 30.9.2014 அன்று தனது கணவர் கார்த்திக்கை அழைத்துக்கொண்டு ஜெயபாரதி மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர், கார்த்திக்குடன் தகராறில் ஈடுபட்ட ஜெயபாரதி அவரை கடற்கரை பகுதியில் விட்டு சென்றார்.
இதற்கிடையே திட்டமிட்டபடி கடற்கரை பகுதியில் நண்பர்கள் 2 பேருடன் தயாராக இருந்த ஹரிகிருஷ்ணன் கார்த்திக்கை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாரதி உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
கைதானவர்களில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயபாரதி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை சென்னை 6-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் டீக்ராஜ் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயபாரதி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story