குன்னூர் அருகே, தேயிலை தோட்டத்தில் முகாமிடும் காட்டெருமைகள் - பொதுமக்கள் அச்சம்
குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் முகாமிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னூர்,
குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிளாக் பிரிட்ஜில் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது. இங்கு காட்டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் தனியார் தேயிலை தோட்டம் வழியாக அவாஹில் ராணுவ முகாம் உள்ள வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. இவ்வாறு செல்லும் காட்டெருமைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் நல்லப்பன் தெருவில் இருந்து அண்ணாநகர் செல்லும் சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் காட்டெருமை நின்று கொண்டிருந்தது. மேலும் அதன் அருகில் மற்றொரு காட்டெருமை படுத்து இருந்தது. காட்டெருமை குட்டியுடன் இருந்ததால், பொதுமக்களை பார்த்தும் ஆக்ரோசமாக தேயிலை செடிகளை நாசம் செய்தது.
இதனைக்கண்ட பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல மிகுந்த அச்சம் அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள், தனியார் பஸ் மூலம் குன்னூருக்கு சென்றனர். பின்னர் தேயிலை தோட்டத்திற்குள் நின்று கொண்டு இருந்த காட்டெருமைகள் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு-அண்ணா நகர் சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் அடிக்கடி காட்டெருமைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காட்டெருமைகளை வனத்துறையினர் கண்காணித்து அவைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story