பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் புகுந்து ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் புகுந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜீவரத்தினம்(வயது 60). புதுவை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்ததில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து அதில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம். ஜீவரத்தினம் குடும்பத்துடன் சீரடி சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜீவரத்தினம் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.
அதனைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவரத்தினம் வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை நடந்த பேராசிரியர் வீட்டில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story