மஞ்சூர் அருகே நிலச்சரிவு, அந்தரத்தில் தொங்கும் வீடுகளால் மக்கள் அச்சம் - பாதுகாப்பான மாற்றிடம் வழங்க கோரிக்கை
மஞ்சூர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான மாற்றிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கனமழையாக கொட்டி தீர்த்தது. குறிப்பாக அவலாஞ்சியில் கடந்த 8-ந் தேதி 820 மில்லி மீட்டர் (82 செ.மீ.) மழையும், அடுத்த நாள் 911 மில்லி மீட்டர் மழையும் கொட்டியது.
கனமழை காரணமாக ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, ஊட்டி-எமரால்டு சாலை உள்பட பல சாலைகளில் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் படிந்து சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அவலாஞ்சிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஊட்டி அருகே விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மஞ்சூர் அருகே எமரால்டு தக்கர்பாபா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெய்த மழையால் வீடுகளையொட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு பகுதி தேயிலை தோட்டம் அப்படியே அடித்து செல்லப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக வீடுகள் தப்பியதோடு, மக்களும் உயிர் தப்பினார்கள். ஆனாலும் சில வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டு, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வருகிற மாதத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கினால், அங்கு மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, தக்கர்பாபா நகரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதோடு, அவர்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புது அட்டுபாயில் கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 வீடுகள் சேதம் அடைந்து, அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. நிலச்சரிவில் 2 பேர் மண்ணுக்குள் சிக்கினர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து அவர்களை உயிரோடு மீட்டனர். தக்கர்பாபா நகர், புது அட்டுபாயில் 2 பகுதிகளும் அவலாஞ்சி அருகே உள்ளது. அங்கு மழைப்பொழிவு அதிகமாக இருந்த காரணத்தால் தான் நிலச்சரிவுகள் ஏற் பட்டன.
அவலாஞ்சியில் பசுமையாக காணப்பட்ட மலைமுகடுகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உள்ளன. காட்டாற்று வெள்ளத்தில் மரங்கள் அடித்து செல்லப்பட்டன. தற்போது கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பினாலும் முழுமையாக திரும்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Related Tags :
Next Story