தி.க., தி.மு.க. இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்படுகிறது; சேலத்தில் நடந்த பவள விழா மாநாட்டில் கி.வீரமணி பேச்சு


தி.க., தி.மு.க. இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்படுகிறது; சேலத்தில் நடந்த பவள விழா மாநாட்டில் கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 28 Aug 2019 5:15 AM IST (Updated: 28 Aug 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

தி.க., தி.மு.க. இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்படுகிறது என சேலத்தில் நடந்த பவள விழா மாநாட்டில் கி.வீரமணி பேசினார்.

சேலம், 

திராவிடர் கழக 75-ம் ஆண்டு பவள விழா மாநாடு சேலம் அம்மாபேட்டையில் உள்ள கொங்கு வெள்ளாள திருமண மண்டபத்தில் நேற்று காலையில் தொடங்கி நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

தி.க.வில் இருப்பவர்கள் பஞ்சாயத்தில் கூட உறுப்பினராக ஆக முடியாது என அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்களோடு வந்தால் சமுதாய விடுதலைக்காக சிறைச்சாலைக்கு தான் அழைத்து செல்வோம். சாதி ஒழிப்பு, தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றை தடுக்க எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.

பெரியார் காலத்தில் இருந்த எதிரிகள் நேர்மையான எதிரிகள். ஆனால் தற்போது உள்ள எதிரிகள் சூழ்ச்சியானவர்கள். எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்களை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும். பெரும்பான்மையை பயன்படுத்தி அரசியல் சட்டத்தை தூக்கிப் போடும் நிலை உள்ளது. நாங்கள் என்றைக்கும் அடக்குமுறைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம். இதேபோல் மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழர் என்பது மொழியின் பெயர். ஆனால் திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயர். அதற்காக தான் திராவிடர் கழகம் என பெரியாரால் பெயர் வைக்கப்பட்டது. சினிமா கவர்ச்சியை நம்பி ஏமாற வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதேபோன்று திராவிடம் குறித்து குழப்புபவர்கள் ஆரியத்தின் மாய மான்கள். அவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

தி.க., தி.மு.க. இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்படுகிறது. தி.மு.க. அரசியலை பார்த்து கொள்ளும், திராவிடர் கழகம் அதற்கு அணியை உருவாக்கி பாதுகாக்கும். தி.க. எங்களுக்கு பயிற்சி பட்டறை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதத்தால், மொழியால் வேறுபட்டு இருந்தாலும் திராவிடர் என்ற இனத்தால் ஒன்றுபட்டுள்ளோம். திராவிட இயக்கத்தை அண்ணாவை வைத்து அழிக்க பார்ப்பனர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்களை அண்ணா ஏமாற்றி விட்டார். ராமர், கிருஷ்ணர் ஆகியோரை வைத்து அரசியல் செய்தாலும், அது அவர்களுக்கு தேர்தலில் கைகொடுக்கவில்லை. சாதி ஒழிப்பு, பெண் அடிமைக்கு எதிரான அறப்போரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

தமிழகத்தில் முதலில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் எங்களுக்கு 5 தொகுதிகள் வெற்றி கிடைக்கும் என தலைமைக்கு தெரிவித்தேன். ஒவ்வொரு கட்ட சுற்றுப்பயணத்தின் போது மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியினால் 10 தொகுதிகள் கிடைக்கும் என்பது தெரியவந்தது. இதற்கு மோடியின் மீது இருக்கும் வெறுப்பு தான். இவர் மீது இருப்பது தனிமனித வெறுப்பல்ல, தத்துவம் தான் காரணம்.

இந்த உணர்வை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்குப் பிறகு இப்போது தான் நேருக்கு நேர் மிகமோசமான எதிரியை பார்க்கிறது. கொள்கை ரீதியில் மக்களை தயார் செய்யாமல் மோசமான எதிரியை எதிர்கொள்ள முடியாது. காஷ்மீர் மக்கள் நேருவை நம்பியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சியை நம்பி தான் வந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். காஷ்மீர் மக்களுக்கு மட்டும் தனிச்சலுகை கிடையாது. இந்தியாவில் சில மாநிலங்களுக்கு தனி சலுகைகள் உள்ளன.

காஷ்மீர் மக்கள் 20 நாட்களாக இருட்டறையில் பூட்டி வைக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவை நம்பி வந்த காஷ்மீர் மக்கள் இன்று அகதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர். இதை சொன்னால் எங்களை எல்லாம் பாகிஸ்தான் ஆதரவு கட்சிகள் என்று பா.ஜனதா கூறுகிறது. மோடி தேசத்தை பிரிக்க பார்க்கிறார். எதிர்க்கட்சியினர் காஷ்மீர் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் உள்ளே புரட்சி நடக்கிறது. அங்கு இருப்பவர்கள் பாகிஸ்தானிய மக்கள் அல்ல. இங்கு ஒரு சதவீதம் தீவிரவாதிகள் இருக்கலாம். மோடி இருப்பதனால் தான் திராவிட இயக்கத்தின் அவசியத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள முடிகிறது. பெரியாரால் தான் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் மதசார்பற்ற தன்மைக்காக தி.க. தற்கொலை படை போல உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும் போது, ‘பொதுவுடமை இயக்கம் மற்றும் தி.க.வை பிரிக்க முடியாது. தமிழர்களின் வரலாறு இரண்டு இயக்கங்களை இணைத்து வருகிறது. திராவிட இயக்கத்தின் தேவை நேற்று, இன்று, நாளை என என்றைக்கும் அவசியமாக உள்ளது. மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினர் சேர்க்கும் கட்சியில் சமூக விரோதிகள் கூட சேரலாம். தமிழகத்தில் திராவிடர் இயக்கம் ஒருங்கிணைத்தது போல, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் ஒருங்கிணைத்து இருந்தால் பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைத்து இருக்காது’ என்றார். மனிதநேய மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது, 2-ம் முறையாக பொறுப்பு ஏற்ற பிரதமர் மோடி அரசியல் அமைப்பு சட்டங்களை குழி தோண்டி புதைத்துவிட்டார். தமிழகம் பெரியார் மண் என்பதால் மோடியின் வடமாநில வித்தை இங்கு பலிக்கவில்லை. தமிழகம் என்றைக்கும் பெரியார் மண் தான். முத்தலாக் மற்றும் தேசிய புலனாய்வு மசோதாவை திரும்ப பெறவேண்டும்’ என்றார்.

Next Story