தி.மு.க. நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை


தி.மு.க. நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2019 5:15 AM IST (Updated: 28 Aug 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூர் அருகே தி.மு.க. நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த் (வயது 50). இவர் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தார். இவர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் உறவினர். பரமத்தி வேலூரில் உள்ள பேட்டை பகுதியில் ஆனந்த் காது, மூக்கு, தொண்டை ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வந்தார். ஆஸ்பத்திரியின் மாடி பகுதியில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி தமிழ்செல்வி (45). இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அபர்ணா (17) என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வந்து பணிகளை கவனித்த டாக்டர் ஆனந்த், மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து அனைவருக்கும் சம்பளம் கொடுத்துள்ளார். அப்போது பணியாளர்கள் சிலர் அவரிடம், வழக்கமாக 1-ந் தேதி தானே சம்பளம் தருவீர்கள். தற்போது முன்னதாக தந்து விட்டீர்களே என கேட்டதற்கு, நான் சில நாட்கள் வெளியூர் செல்கிறேன். திரும்பி வர காலதாமதம் ஆகும். அதனால்தான் உங்களுக்கு முன்னதாகவே சம்பளம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் மதியம் 1.30 மணியளவில் ஆனந்த் காரை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் பரமத்தி வேலூர் அருகே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலப்பட்டி பக்கத்தில் செங்கப்பள்ளி பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் ஆனந்த் பிணமாக கிடப்பதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அங்கு தோட்டத்தில் ஒரு அறையின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியின் கீழ் கழுத்தில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் உட்கார்ந்தப்படி ஆனந்த் பிணமாக இருந்தது தெரியவந்தது.

அருகில் நாட்டுத்துப்பாக்கி கிடந்தது. அந்த துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை அவர்கள் சேகரித்தனர். பின்னர் ஆனந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டாக்டர் ஆனந்த் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக டாக்டர் ஆனந்த் தோட்டத்துக்கு வந்ததும், அவரது உறவினர் செல்வம் (45) என்பவருக்கு போன் செய்து உடனே தோட்டத்துக்கு வருமாறு அழைத்து உள்ளார். இதன்பேரில் செல்வம் தோட்டத்தின் உள்ளே வந்ததும், ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தோட்டத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு செல்வம் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் ஓடிச்சென்று பார்த்தபோது ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதன்பிறகே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தான் தற்கொலை செய்வதை தெரியப்படுத்தவே ஆனந்த் இவ்வாறு செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தின் மனைவி தமிழ்செல்வி கோவைக்கு சென்றிருந்தார்.

அவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தினால் ஆனந்தின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தி.மு.க. நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story