ஏ.டி.எம். எந்திரத்தில் வரும் கிழிந்த ரூபாய் நோட்டுகளால் வாடிக்கையாளர்கள் அவதி


ஏ.டி.எம். எந்திரத்தில் வரும் கிழிந்த ரூபாய் நோட்டுகளால் வாடிக்கையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 27 Aug 2019 11:15 PM GMT (Updated: 28 Aug 2019 12:07 AM GMT)

ஏ.டி.எம். எந்திரத்தில் வரும் கிழிந்த ரூபாய் நோட்டுகளால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகிறார்கள். அவற்றை உடனடியாக வங்கிகள் மாற்றித்தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோவை,

வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்கும் காலம் மாறிவிட்டது. தற்போது ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றால் சில நிமிடங்களில் பணத்தை எடுத்துவிடலாம். இதனால் வங்கிகள் சார்பில் பல இடங்களில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகர பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் பணம் செலுத்தும் வசதியும் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட வங்கிகளின் மையத்தில் பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த எப்போதுமே வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்தநிலையில், ஏ.டி.எம். எந்திரங்களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் அதிகளவில் வருகின்றன. இதை மாற்ற பெரும்பாலான வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் சில வங்கிகளில் மட்டுமே கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு அதற்கு மாற்று ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகிறது.

பெரும்பாலான வங்கிகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்குவது இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:-

தற்போது ஆன்லைன் மூலம் மற்றொரு வங்கி கணக்குக்கு பணம் செலுத்தும் வசதியும் இருக்கிறது. இது குறித்து தெரிந்தவர்கள் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுப்பது இல்லை. அனைத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்திவிடுகிறார்கள். ஆனால் சில தேவைகளுக்காக கண்டிப்பாக பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுதான் ஆக வேண்டும்.

அவ்வாறு செல்லும்போது அந்த எந்திரத்தில் இருந்து அதிகளவில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் சென்று கேட்டால், ரசீது கொடுங்கள் என்று கூறுகிறார்கள். சில எந்திரங்களில் ரசீதும் வருவது கிடையாது.

ரசீது இல்லாமல் சென்றால், நீங்கள் எங்களது வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்கவில்லை. வேறு எங்கேயோ பணம் எடுத்துவிட்டு இங்கு வருகிறீர்கள் என்று கூறுகிறார்கள். சில அதிகாரிகள், நாங்கள் கண்டிப்பாக கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைப்பது இல்லை என்றே கூறுகிறார்கள். இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எடுத்தவர்கள் அதை மாற்ற முடியாமல் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

அதுபோன்று ஏ.டி.எம் எந்திரத்திலேயே பணம் செலுத்தும் வசதி இருப்பதால், ரூபாய் நோட்டுகள் பழையதாக இருந்தால் அதை எடுப்பது இல்லை. ஆனால் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் எப்படி வருகிறது என்பதுதான் தெரியவில்லை.

வாடிக்கையாளர்களுக்காகத்தான் இதுபோன்ற எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் ரூபாய் நோட்டுகளை வைக்கும்போது கிழிந்து இருக்கிறதா என்று பார்த்து வைப்பது வங்கி அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால் அவர்கள் அதை செய்வது இல்லை. தவறுதலாக சென்றுவிட்டால், அதற்கு பதிலாக அந்த நோட்டுகளை அவர்கள் மாற்றியும் கொடுப்பது இல்லை.

எனவே ஏ.டி.எம். எந்திரத்தில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைக்காமல், நன்றாக இருக்கும் ரூபாய் நோட்டுகளை வைக்க வங்கி அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். அதுபோன்று வாடிக்கையாளர்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தால் அதை எவ்வித ஆவணமும் இல்லாமல் உடனடியாக மாற்றிக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story