மாங்குரோவ் மரங்களின் வழியாக முருங்கப்பாக்கத்தில் இருந்து அரிக்கன்மேட்டிற்கு படகு சவாரி - சட்டசபையில் தகவல்


மாங்குரோவ் மரங்களின் வழியாக முருங்கப்பாக்கத்தில் இருந்து அரிக்கன்மேட்டிற்கு படகு சவாரி - சட்டசபையில் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 28 Aug 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

மாங்குரோவ் மரங்களின் வழியாக முருங்கப்பாக்கத்தில் இருந்து அரிக்கன்மேட்டிற்கு படகு சவாரி தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.181 கோடிக்கும் மேலாக பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மணப்பட்டு, நரம்பை கடற்கரை பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முருங்கப்பாக்கத்தில் பாரம்பரிய சுற்றுலா கிராமம் ஒன்று உருவாக்கப்படும்.

சுற்றுப்புற சூழல் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக அலையாத்தி (மாங்குரோவ்) மரங்களின் வழியாக பயணித்து இயற்கை சுற்றுலா அனுபவம் பெற முருங்கப்பாக்கம் கலைகள் மற்றும் கைவினை கிராமத்திலிருந்து அரிக்கன்மேட்டிற்கு பாண்டி நெக்லஸ் என்ற புதிய படகு சவாரி இந்த ஆண்டு தொடங்கப்படும்.

பல்வேறு சுற்றுலா கருப்பொருட்களை மையமாக கொண்டு இ-பைக் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, புதுவை கடற்கரைகள், உணவகங்கள் மற்றும் புதுச்சேரியின் பிற பிராந்தியங்களையும் உள்ளடக்கிய சுற்றுலா ஆகியவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

பல்வேறு சுற்றுலா திட்டங்களுக்காக ரூ.114 கோடி மதிப்பில் திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்திடம் நிதியுதவி கோரி சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. புதுவையில் பகுதிவழி சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடு, ஒலி-ஒளி காட்சி மையம், காரைக்கால் பகுதியில் அலையாத்தி காடுகள், திறந்தவெளி அரங்கம் மற்றும் பல்நோக்கு மையத்தை உருவாக்குதல், பெரிய மசூதியின் திருக்குளத்தை அழகுபடுத்துதல், மாகி பகுதியில் உள்ள கடற்கரையை மேம்படுத்துதல், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை மேம்படுத்துதல், ஏனாம் தாவரவியல் பூங்காவினை மேம்படுத்துதல், ஆற்றங்கரை பகுதியை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும்.

புதுவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டு புதிய வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தல், சாலை சந்திப்பு விரிவாக்க பணிகளை மேற்கொள்ளுதல், பஸ் நிறுத்தங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Next Story