தந்தை, மகன்கள் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய ஜோதிடர் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை: தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு


தந்தை, மகன்கள் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய ஜோதிடர் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை: தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 5:15 AM IST (Updated: 29 Aug 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் தந்தை, மகன்கள் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய ஜோதிடர் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடிரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 39). வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோதிடர் சாமிக்கண்ணு (47) என்பவருக்கும், இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 24.11.2017 அன்று சாமிக்கண்ணு, அந்த பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற நாகராஜ், இந்த இடத்தில் கம்பிவேலி அமைத்தால், குழந்தைகள் விளையாடும் போது எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கம்பி வேலி அமைக்க வேண்டாம். சுவர் கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கிருந்தவர்கள், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

அதைதொடர்ந்து அன்று மாலை நாகராஜ் தனது சகோதரர் மணிகண்டனுடன், அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சாமிக்கண்ணுவும், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் விஜய் (24), மகேந்திரன் (26) ஆகியோர் வந்தனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து, நாகராஜ் மற்றும் மணிகண்டனை தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் நாகராஜ் மற்றும் மணிகண்டனை குத்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த நாகராஜின் தந்தை தண்டபாணியும், நாகராஜின் சித்தப்பா காளிமுத்துவும் ஓடிச்சென்று அவர்களை தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், தண்டபாணி, காளிமுத்துவையும் குத்திவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவத்தில் கத்திக்குத்து பட்டு பலத்த காயம் அடைந்த நாகராஜ், மணிகண்டன், தண்டபாணி, காளிமுத்து ஆகியோர் அங்கேயே சரிந்து விழுந்தனர். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் சாமிக்கண்ணு, விஜய் மற்றும் மகேந்திரன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து இவர்கள் மீதான வழக்கு தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சாமிக்கண்ணு, விஜய், மகேந்திரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி லீலா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பழனிச்சாமி ஆஜராகி வாதாடினார்.

Next Story