இடுப்பில் மண்சட்டி, தலையில் கொசுவலையுடன் அமைச்சரிடம் மனு - பா.ஜனதா மகளிர் அணி தலைவியால் பரபரப்பு


இடுப்பில் மண்சட்டி, தலையில் கொசுவலையுடன் அமைச்சரிடம் மனு - பா.ஜனதா மகளிர் அணி தலைவியால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 5:00 AM IST (Updated: 29 Aug 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் நடந்த முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாமில் இடுப்பில் மண்சட்டி, தலையில் கொசுவலையை போர்த்தியபடி வந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த பா.ஜனதா மகளிர் அணி தலைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தாசில்தார் ஜெயராமன் தலைமையில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தலையில் கொசுவலையை போர்த்திக்கொண்டும், இடுப்பில் மண்சட்டியை வைத்து கொண்டும் வந்த திருவொற்றியூர் நகர பா.ஜனதா மகளிர் அணி தலைவி அம்சவேணி, அமைச்சர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அம்சவேணி கூறும்போது, “நான் வசிக்கும் 6-வது வார்டு திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகள் அலட்சிய போக்கை கண்டிக்கும் வகையில் கொசுவலையை தலையில் போர்த்திக்கொண்டும், இடுப்பில் மண்சட்டியை வைத்துக்கொண்டும் புகார் மனு கொடுத்தேன்” என்றார்.

இதேபோல் திருவொற்றியூர் வக்கீல்கள், அம்பிகை தாஸ் தலைமையில் திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

முன்னதாக சென்னை ராயபுரத்தில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார்.

இதில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேச பழகிக்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக மட்டுமே. தி.மு.க.வினரின் வெளிநாடு பயணம்தான் ஆதாயம் தேடும் பயணம்.

இந்த வெளிநாட்டு பயணத்தில் துணை முதல்-அமைச்சர் கலந்து கொள்ளாததை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடவேண்டாம். அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.

ஐ.நா. சபையில் பேச யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஐ.நா. சபை யாரை பேச அழைப்பு விடுக்கிறது என்பது மட்டுமே முக்கியம். அப்படி எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு அனுமதி கிடைத்தால் அங்கு சென்றும் துண்டுச்சீட்டினை பார்த்துப் பேச வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. ராஜேந்திரன், தாசில்தார் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story