விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.5 ஆயிரம் பரிசு: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு


விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.5 ஆயிரம் பரிசு: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2019 5:00 AM IST (Updated: 29 Aug 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவோருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் சட்டசபை நேற்று கூடியதும் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து பிரச்சினை எழுப்பினார்கள். மேலும் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதையே நிறைவேற்றாத நிலையில் தற்போது வெற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறி சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட் ரூ.8,425 கோடியில் தயாரிக்கப்பட்டிருந்தது.

அதன் விவரம் வருமாறு:-

சாலை விபத்தில் சிக்கியோரை காப்பாற்றி உடனடியாக மருத்துவ வசதி கிடைக்கும்படி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும் நபருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

வேளாண் பயிர் உற்பத்தி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு முன்பு இருந்ததைவிட இருமடங்கு உயர்த்தி மானியம் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ரூ.16.15 கோடி கூடுதல் செலவாகும்.

சிறுதானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், பயறு வகை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வீதமும் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.76.72 லட்சம் கூடுதல் செலவாகும். மேலும் மீனவர் நிவாரணத்தொகை உயர்வு, காவல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதுச்சேரி துறைமுக தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story