5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை: பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
5 மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை என்பதால் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி,
திருச்சி தொலை தொடர்பு வருவாய் மாவட்டமான திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளடக்கிய பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். கேபிள் பழுது சரிபார்ப்பது, லைன்மேன் வேலை, கணினி இயக்குவது, தொழில் நுட்ப உதவியாளர் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள். இ.எஸ்.ஐ., பி.எப்.-க்கு பணம் பிடித்தம் போக மாதம் ரூ.7,500 சம்பளம் கிடைக்கும். மேலும் கடந்த ஜனவரி மாதம்(2019) முதல் ஒப்பந்ததாரர் இ.எஸ்.ஐ.-பி.எப்.-க்கு பணமும் செலுத்தவில்லை.
கடந்த 5 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. நிர்வாகத்திடம் கேட்டால், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என காரணம் கூறப்படுகிறது. நிலுவை சம்பளம் தொகை ஒரு நபருக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் உள்ளது. நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மத்திய ஊழியர் சங்கம் அரைகூவல்படி, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் முபாரக் அலி முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அஸ்லாம்பாஷா, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சின்னையன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story