தூர்வார வலியுறுத்தி; ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - கோட்டூர் அருகே நடந்தது
கோட்டூர் அருகே தூர்வார வலியுறுத்தி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்,-
கோட்டூர் அருகே உள்ள வேதபுரத்தில் கோரையாற்றில் இருந்து சாளுவனாறு பிரிந்து வெங்கத்தான்குடி, அக்கரைக்கோட்டகம், கீழபுத்தூர், மீனம்பநல்லூர், பண்டாரவாடை, நெடும்பலம் வழியாக கடலுக்கு செல்கிறது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்காகவும், வடிகாலாகவும் இந்த ஆறு பயன்பட்டு வருகிறது.
இந்த ஆற்றில் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வேதபுரத்தில் இருந்து அக்கரைக்கோட்டகம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரைதான் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த ஆற்றை நெடும்பலம் வரை (10 கிலோ மீட்டர் தூரம்) தூர்வார வேண்டும்.
அப்போதுதான் பாசனத்திற்கும், மழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வடிவதற்கும் பயன்படும். புத்தூர், மருதவனம், நடுவக்களப்பால் ஆகிய கிராமங்களின் பாசன வாய்க்கால்களையும் துரிதமாக தூர்வார மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனம்பநல்லூரில் விவசாயிகள் சாளுவனாற்றுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story