சிதம்பரத்தில் பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம், மூதாட்டியிடம் ரூ.4 லட்சத்தை பறித்து தப்பிய மர்ம மனிதர்கள்


சிதம்பரத்தில் பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம், மூதாட்டியிடம் ரூ.4 லட்சத்தை பறித்து தப்பிய மர்ம மனிதர்கள்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் மூதாட்டியிடம் ரூ. 4 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிய மர்ம மனிதர்களை பேரன் துரத்தி சென்றதால் அவர்கள் பணப் பையை வீசிவிட்டு தப்பி விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிதம்பரம்,

சிதம்பரம் ஞானபிரகாசம் தெருவை சேர்ந்த சேது என்பவரது மனைவி திலகவதி(வயது 66). இவருடைய பேரன் ராஜ்கமல்(20). பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வரும் இவர், போலீஸ் நண்பர்கள் குழுவிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை திலகவதி தனது பேரனுடன் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார்.

அங்கு அவர் தனது கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்தை எடுத்து, அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது வங்கி முன்புள்ள சாலையில் 50 ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்தன. இதை பார்த்த திலகவதி, ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த மர்ம மனிதர் ஒருவர், திலகவதி வைத்திருந்த பணப் பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த மற்றொரு மர்ம மனிதருடன் சேர்ந்து தப்பி சென்றார்.

இதை பார்த்த பேரன் ராஜ்கமல் தனது மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்களை துரத்தி சென்றார். வேணுகோபால் பிள்ளை தெருவில் உள்ள தனியார் விடுதி அருகே சென்ற அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட போது, கையில் இருந்த பையை ராஜ்கமல் மீது வீசினர். இதில் நிலைதடுமாறிய அவர் தவறி கீழே விழுந்தார். தொடர்ந்து பையை எடுத்து பார்க்கையில் அதில் பணம் அப்படியே இருந்தது. இதன் மூலம் எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்த மர்ம மனிதர்கள் பணப் பையை தூக்கி வீசிவிட்டு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜ்கமல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் தெற்கு வீதியில் இருக்கும் கடைகளின் வெளியே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மமனிதர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் சிதம்பரம் நகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story