திருச்சியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை - பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தனர்


திருச்சியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை - பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தனர்
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தனர்.

மதுக்கூர்,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அண்டமி கண்ணன் ஆறு புதுப்பாலத்தின் அடியில் இரண்டு பேர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) திருநாவுக்கரசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர், மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு இறந்து கிடந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்தவர், திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த குமார் (வயது 35) என்றும், அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த பெரமையன் மனைவி முத்துலட்சுமி (45) என்றும் தெரிய வந்தது.

முத்துலட்சுமிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் விவசாய வேலைக்காக குமாரும், முத்துலட்சுமியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கூர் வந்துள்ளனர். அங்கு தங்கி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் கண்ணன் புது ஆற்றுபாலத்தின் அடியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். முத்துலெட்சுமிக்கும், குமாருக்கும் இடையேயான கள்ளக்காதல் விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story