வல்லம் அருகே, மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் - 2 பேர் கைது


வல்லம் அருகே, மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2019 3:45 AM IST (Updated: 29 Aug 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

வல்லம் அருகே மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், 2 பேரை கைது செய்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை-திருச்சி சாலை வல்லம் பைபாஸ் பாலம் அருகே வந்த சரக்கு ஆட்டோவை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் சரக்கு ஆட்டோவில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வல்லம் அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்த குணசேகரன் (வயது 50), புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பாச்சூரை சேர்ந்த சரவணன் (39) ஆகியோர் என்பதும், மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரன், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வல்லம் ஆலக்குடி சாலையில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் மறிக்க முயன்றனர். இதனை பார்த்ததும் அதில் இருந்த 2 பேர் சரக்கு ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் சரக்கு ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story