திருக்கடையூரில், அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலக கட்டிடம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


திருக்கடையூரில், அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலக கட்டிடம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2019 3:15 AM IST (Updated: 29 Aug 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலக கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கடையூர், 

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருக்கடையூரில் அரசு நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், கண்ணங்குடி, இரவணியன்கோட்டகம், நட்சத்திரமாலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து படித்து செல்கின்றனர்.

2,003 பேர் உறுப்பினர்களை கொண்ட இந்த நூலகத்தில் 27,503 புத்தகங்கள் உள்ளன. இதில் வரலாறு, நாவல், இலக்கியம், கவிதை, கட்டுரை, ஆன்மிகம், அரசியல், சட்டம், சமையல், அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த புத்தகங்கள் உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் இருப்பதால், மாணவர்கள் வந்து படித்து பயன்பெற்று வருகின்றனர். இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட வாசகர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் வந்து தினசரி நாளிதழ்கள் மற்றும் பல்வேறு நூல்களை படித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு திருக்கடையூர் மேலவீதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலக கட்டிடம் கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஆனால் தற்போது வரை வாடகை கட்டிடத்தில் தான் நூலகம் செயல்பட்டு வருகிறது. எனவே திருக்கடையூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நூலக கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story