ஊராட்சி செயலாளரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி; பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
ஊராட்சி செயலாளரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி கோட்டூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்,
கோட்டூர் அருகே சேரி ஊராட்சி செயலாளராக குபேந்திரன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி குபேந்திரன் வேறு ஊராட்சிக்கு மாற்றப்பட்டார் என தகவல் பரவியது.
இதையறிந்த கீழகண்டமங்கலம், மேலகண்டமங்கலம், மேலச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் குபேந்திரனை வேறு ஊராட்சிக்கு மாற்றக்கூடாது என சேரி ஊராட்சி அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாசில்தார் கார்த்தி, கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அன்பழகன் (பொறுப்பு), கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story