கலெக்டருடன் தி.மு.க.எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ‘திடீர்’ சந்திப்பு - குடிமராமத்து பணிகளில் அ.தி.மு.க.வினரே ஈடுபடுவதாக குற்றச்சாட்டு
திருவண்ணாமலை கலெக்டரை தி.மு.க.எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்து குடிமராமத்து பணியில் அ.தி.மு.க.வை சார்ந்தவர்கள் மட்டுமே ஈடுபடுவதாக குற்றம்சாட்டியதோடு இந்த பணியில் பொதுமக்களையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.வி.அம்பேத்குமார் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் “ சட்டமன்றத்தில் பேரவை தலைவரால் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் கூட்டம் குறித்த காலக்கெடுக்குள் நடைபெறுவதும் இல்லை, ஆய்வு மேற்கொள்வதும் இல்லை” என்று கூறியிருந்தனர்.
பின்னர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தின் மூலமாகவும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள பணிகளின் விவரங்களை கேட்டறிந்து உள்ளோம். அதேபோன்று சட்டமன்றத்தில் பேரவை தலைவரால் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுக்கள் இதுவரை இந்த மாவட்டத்தில் எந்தெந்த பணிகளை ஆய்வு செய்துள்ளார்கள் என்ற விவரத்தையும் கலெக்டரிடம் கடிதம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ளோம். இதுவரை மக்கள் நலப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள எந்த குழுவும் வரவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் எங்களிடம் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் என்னென்ன செயல்பட்டு வருகிறது என்ற விவரத்தை தெரிந்து கொண்டதோடு, பொதுமக்கள் எங்களிடம் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம்.
நமது மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் குழுக்கள் எவை? அந்த குழுக்களில் யார், யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தையும் கலெக்டரிடம் கேட்டுள்ளோம். விரைவாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு கூட்டம், ஆய்வு பணிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழக அரசு குடிமராமத்து என்ற பெயரில் பொதுமக்கள் பங்கேற்புடன் பணி செய்வதாக சொல்லி அரசின் பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை, பொதுமக்களை கொண்டு செய்யாமல் அ.தி.மு.க.காரர்களும், அ.தி.மு.க.வை சார்ந்த ஒப்பந்ததாரர்களும் பணிகள் செய்வதால் பல இடங்களில் உள்ளூர் மக்கள், மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் முறையாக அப்பணிகள் பொதுமக்களை கொண்டு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று கலெக்டரிடம் கேட்டுக்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story