திருப்பத்தூர் அருகே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
திருப்பத்தூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்தனர். தடுக்க முயன்ற சலூன் தொழிலாளியை அவர்கள் கம்பியால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள லக்கிய நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 63). இவர் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவரது மனைவி வளர்மதி. மகன் சிங்காரவேலன் (45) எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
வீரபத்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு மகனை பார்ப்பதற்காக பெங்களூருவுக்கு சென்றார். பல நாட்களாக வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் 4 பேர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காக வந்தனர். அவர்கள் வீரபத்திரன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் வெளியில் யாராவது வந்தால் உள்ளே சென்றவர்களுக்கு தகவல் கொடுப்பதற்காக காவலாளி போல் நின்று கொண்டிருந்தார்.
வீரபத்திரனின் வீட்டின் அருகே உள்ள காம்பவுண்டு வீட்டில் சலூன் கடை தொழிலாளி வெங்கடேசன் (42) வசிக்கிறார். அவர் வீரபத்திரனின் வீட்டில் ஆட்கள் நுழையும் சத்தம் கேட்டு தனது காம்பவுண்டிலிருந்து எட்டிப்பார்த்தவாறு யார்? என கேட்டார். அப்போது மர்மநபர்களில் வெளியே நின்றிருந்த ஒருவர் அவர் வைத்திருந்த கம்பியால் வெங்கடேசனின் தலையில் தாக்கியுள்ளார். வெங்கடேசன் கூச்சல் போடவே ஆட்கள் வந்து விடுவார்கள் என கருதி 4 பேரும் சுவர் ஏறி குதித்து ஓட்டம்பிடித்தனர்.
தலையில் காயம் அடைந்த நிலையிலும் வெங்கடேசன் அவர்களை பிடிக்க சத்தம்போட்டவாறே துரத்தினார். ஆனால் மர்மநபர்கள் இருளில் தப்பிவிட்டனர்.
அதற்குள் ஊர் பொது மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளை நடந்தது குறித்து அறிந்த வீரபத்திரன் மனைவியுடன் ஊருக்கு திரும்பினார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை அறிந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது. இது குறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்குவதற்காக தடயவியல் நிபுணர்கள் வந்தனர். அவர்கள் வீரபத்திரன் வீட்டில் உடைக்கப்பட்ட பூட்டு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனிடையே தாக்கப்பட்ட சலூன் தொழிலாளி வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தப்பி ஓடிய மர்மநபர்களின் அடையாளங்கள் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதன்படி மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story