தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் - நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பு
தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்க மரவள்ளி கிழங்கு சாகுபடியில் கறம்பக்குடி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு நல்லவிலை கிடைக்கும் எனவும் எதிர்பார்த்து உள்ளனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் தஞ்சை மாவட்டத்தை ஒட்டியுள்ள 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாகும், மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே கறம்பக்குடி பகுதியில் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்டே கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டும் வெகுவாக குறைந்து விட்டதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க குறைவான தண்ணீர் தேவைப்படும் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில், வாண்டான்விடுதி, ரெகுநாதபுரம், வெள்ளாளவிடுதி, கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த மட்டங்கால், வீரடிப்பட்டி, மங்களாகோவில், மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ள வீரடிப்பட்டியை சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் கூறியதாவது:-
நெல், கரும்பு, வாழை போன்றவற்றிற்கு எங்கள் பகுதியில் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர்மட்டம் 500, 600 அடிக்கு கீழே சென்று விட்டது. தண்ணீர் பிரச்சினை, வேலை ஆட்கள் பற்றாக்குறை, தொடர்பராமரிப்பு, உரம், பூச்சி மருந்து விலை உயர்வு போன்ற பிரச்சினைகளால் எங்கள்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியை குறைத்து விட்டனர். மரவள்ளி கிழங்கிற்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், பராமரிப்பு செலவும் அதிகம் இல்லை. தொடர் கண்காணிப்பும் தேவையில்லை.
இதனால் மரவள்ளி கிழங்குகளை சாகுபடி செய்துள்ளோம். ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். தற்போது கறம்பக்குடி, கந்தர்வகோட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கிழங்கு பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. சென்ற ஆண்டு வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்த போதும், அவர்களுக்குள் குழுவை ஏற்படுத்தி கொண்டு ஒரு டன் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே கொள்முதல் செய்தனர். இந்த ஆண்டு முன் கூட்டியே வியாபாரிகள் சிலர் கறம்பக்குடி பகுதிக்கு வந்து செடிகளின் வளர்ச்சியை பார்த்து முன்பணம் கொடுத்து சென்றுள்ளனர். எனவே நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story