ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது மோடி-அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்; திருச்சி த.மு.மு.க. பிரமுகர் கைது


ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது மோடி-அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்; திருச்சி த.மு.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2019 4:15 AM IST (Updated: 29 Aug 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி-அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய திருச்சி த.மு.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

மங்களமேடு, 

மத்திய பா.ஜனதா அரசு மக்களை பழிவாங்கும் நோக்கோடு இயற்றியுள்ள கருப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள முத்தலாக் தடை சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு நீக்கம், கும்பல் படுகொலை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள லப்பை குடிக்காட்டில் கடந்த 23-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாரும், தலைமை கழக பேச்சாளருமான திருச்சி பீமநகரை சேர்ந்த முகமது ஷெரிப் (வயது 24) கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலையை எடுத்து விடுவோம், நாடாளுமன்றத்தை தகர்ப்போம் என்று பேசியதாக தெரிகிறது.

பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய முகமது ஷெரிப்பின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோ பதிவை பார்த்த பலர் கண்டனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே மங்களமேடு போலீசாரிடம் இருந்தும், பெரம்பலூர் மாவட்ட உளவுத்துறை போலீசாரிடம் இருந்தும் முகமது ஷெரிப் பேசிய முழு வீடியோவையும் சென்னை காவல்துறை தலைமையகம் கேட்டு பெற்றது. அந்த வீடியோவை முழுமையாக ஆய்வு செய்த போலீஸ் உயர் அதிகாரிகள் முதல்கட்டமாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மத உணர்வை தூண்டும் வகையிலும், பிரதமர், உள்துறைமந்திரி ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்து பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முகமது ஷெரிப்பை கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

அதன்படி நேற்று காலை திருச்சி பீமநகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் தலைமையிலான போலீசார் முகமது ஷெரிப்பை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மீது கொலை மிரட்டல், மதஉணர்வை தூண்டும் வகையில் பேசுதல், பிரிவினைவாதத்தை ஏற்படுத்துதல் போன்ற வகையில் 188, 189, 153 ஏ, 504, 505, 506 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் மாலையில் அவரை பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கருப்பசாமி, முகமது ஷெரிப்பை அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பின் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story