ஆத்தூரில் 294 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில், மேலும் 2 பேர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
ஆத்தூரில் 294 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த 21-ந்தேதி அதிகாலையில் லோடு ஆட்டோவில் பிளாஸ்டிக் கூடைகளின் அடியில், மூட்டைகளில் மறைத்து கடத்தி செல்லப்பட்ட 294 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக அந்த லோடு ஆட்டோ டிரைவரான ஆத்தூர் யாதவர் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடாசலத்தை (40) போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், ஆத்தூர் அருகே புன்னக்காயலைச் சேர்ந்த கில்டன் என்பவர், வெங்கடாசலத்திடம் ஆத்தூரை அடுத்த முக்காணி பெட்ரோல் பங்க் அருகில் கஞ்சா மூட்டைகளுடன் நின்ற லோடு ஆட்டோவை புன்னக்காயலுக்கு ஓட்டி வருமாறு கூறியது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான கில்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக, நாகை மாவட்டம் வேதாரண்யம் முடுக்கு வீதியைச் சேர்ந்த ரத்தின சபாபதி மகன் சக்திவேல் (28), புன்னக்காயல் வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த ராயப்பன் மகன் சாரோன் (28) ஆகிய 2 பேரை ஆத்தூர் போலீசார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும், நேற்று திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான முக்கிய குற்றவாளியான கில்டனை கைது செய்த பின்னரே கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்து, எங்கு அனுப்ப முயன்றனர்? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story