திருடர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு - தொழிலாளர்கள் மகிழ்ச்சி
திருடர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ‘பூட்டு’ தான். குடிசை தொழிலாக தொடங்கப்பட்டு தற்போது திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்க்கும் தொழிலாக பூட்டு தொழில் உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் தனிநபர் ஒருவரால் இந்த தொழில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பல தலைமுறைகளை கடந்து வந்த பூட்டு தொழில் தற்காலத்துக்கு ஏற்றபடி வளர்ச்சியடைந்துள்ளது. திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழில் திண்டுக்கல் நாகல் நகர், வேடபட்டி, நல்லாம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மாங்காய் பூட்டு, பெட்டிபூட்டு, லிவர் பூட்டு, கொத்துப்பூட்டு, நான்குசாவி பூட்டு, பெல் பூட்டு என பல வகையிலான பூட்டுகள் திண்டுக்கல் பகுதியில் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் பூட்டுகளில், ஒரு பூட்டுக்கு 2 சாவிகள், ஒரு பூட்டுக்கு மூன்று சாவிகள் அல்லது நான்கு சாவிகளுடன் வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் வட மாநிலத்தை சேர்ந்த சிலர் திண்டுக்கல் பூட்டு போலவே தயாரித்து குறைந்த விலைக்கு விற்க தொடங்கினர். ஒரு தனியார் நிறுவனம் திண்டுக்கல் பூட்டை போலவே பூட்டுக்களை தயார் செய்து குறைந்த விலைக்கு விற்றதால், திண்டுக்கல் பூட்டின் விற்பனை பாதிக்கப்பட்டது.
இதனால் பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல்லில் குறைய தொடங்கியது. இந்த நிலையில் வெளிமாநில பூட்டு தயாரிப்பாளர்களால் திண்டுக்கல்லில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் பூட்டு தொழில் நலிவடைய கூடாது என்றும், திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்றும் திண்டுக்கல் பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்கள் மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
அதன் பலனாக திண்டுக்கல் பூட்டுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் திண்டுக்கல் பூட்டு போலவே வெளிமாநில தொழிலாளர்கள் பூட்டு தயாரிப்பது முழுமையாக தடுக்கப்படும். இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால கனவாகும். அது தற்போது நனவாகியுள்ளது. திண்டுக்கல் பூட்டுக்கும் தனி அங்கீகாரம் கிடைக்கும். மேலும் பூட்டு தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதால் பூட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றனர்.
Related Tags :
Next Story