சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: டிப்ளமோ மாணவர்கள் 2 பேர் பலி வல்லம் அருகே பரிதாபம்


சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: டிப்ளமோ மாணவர்கள் 2 பேர் பலி வல்லம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:30 AM IST (Updated: 30 Aug 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

வல்லம் அருகே சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி டிப்ளமோ மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியை சேர்ந்த சையது மகன் அப்சல் (வயது 18), அதே ஊரை சேர்ந்த லாரன்ஸ் மகன் ஆரோக்ய ஜோயல் (18), திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமநேரியை சேர்ந்த முகமது உசேன் மகன் சபீக் அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேரும் வல்லத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வல்லத்தில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சபீக் அப்துல் ரகுமான் ஓட்டினார்.

அப்போது தஞ்சை- திருச்சி சாலையில் உள்ள திருமலைசமுத்திரம் அருகே சென்ற போது எதிரே மயிலாடுதுறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

2 பேர் பலி

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆரோக்ய ஜோயல், அப்சல் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்த சபீக் அப்துல் ரகுமானை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆரோக்ய ஜோயல், அப்சல் ஆகியோரி ன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தஞ்சை-திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story